Tuesday, December 14, 2010

விருதகிரி – திரை விமர்சனம்


விஜயகாந்த் இயக்கி நடித்துள்ள படம். அரசியல் கலவையாக வந்துள்ளது. மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒரு புறம் என்ற வாலியின் டைட்டில் பாடலிலேயே விஜயகாந்த் இதுவரை நடித்த படங்களின் ஸ்டில்கள் அவர் அவ்வப்போது பேசி வரும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் திட்டம். இலவச கல்வி அளித்தல், ஆட்சிக்கு வருதல் போன்றவை காட்சி படுத்தப்பட்டு உள்ளன.

ஸ்காட்லாந்தில் கதை துவங்குகிறது. அங்குள்ள பிரதமரை கொல்ல தீவிரவாதிகள் ஊடுருவுகின்றனர். அந்த நாட்டுக்கு பணி நிமித்தம் செல்லும் தமிழக போலீஸ் உயர் அதிகாரி விஜயகாந்த் ஸ்காட்லாந்து போலீசுக்கு உதவியாக களம் இறங்கி தீவிரவாதிகளை பிடிக்கிறார். அவர் திறமையை நாடே கொண்டாடுகிறது.

தமிழகம் திரும்பும் விஜயகாந்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.

அரவாணிகள் மர்மமாய் காணாமல் போவதாக புகார் வருகிறது. அதை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார். சண்முக ராஜன் அவர்களை கடத்தி கொன்று உடல் உறுப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அதிர்ச்சி தகவல் தெரிய வருகிறது. அவரது கொலை பங்களாவில் நுழைந்து அடைத்து வைத்த அரவாணிகளை மீட்கிறார்.

விஜயகாந்த் பாதுகாப்பில் வளரும் பிரியா ஆஸ்திரேலியாவுக்கு படிக்க செல்கிறாள். அங்கு தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறாள். அவனை காப்பாற்ற விஜயகாந்த் அந்த நாட்டுக்கு பறக்கிறார். அங்கு அல்பேனியா தீவிரவாதிகள் பிரியாவை விபசாரத்தில் தள்ள முயற்சிக்கின்றனர். விஜயகாந்த் துப்புதுலக்கி பிரியாவை மீட்பதும் தீவிரவாதிகளை கூண்டோடு அழிப்பதும் மீதி கதை…

திரைக்கதையை கச்சிதமாக செதுக்கி காட்சிகளை விறுவிறுப்பாக நகர வைத்து முன்னணி இயக்குனர்களுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறார் விஜயகாந்த்.

ஸ்காட்லாந்தில் கர்ப்பிணி வேடத்தில் தப்பிக்க முயலும் தீவிரவாதியை கால் செருப்பை வைத்து கண்டுபிடித்து அழிக்கும் ஆரம்பமே ஆரவாரம். அரவாணிகள் கடத்தலை துப்பு துலக்கும் சீன்கள் திகில். மரண பங்களாவில் புகுந்துவில்லன்களை அழிப்பதும்… உப்பில் ஊற வைத்துள்ள பிணக்குவியல்களை கண்டுபிடிப்பதும் பயங்கரம்.

ஆஸ்திரேலியாவில் பிரியா கடத்தப்படும்போது செல்போனிலேயே பயங்கரவாதிகளின் அடையாளங்களை சொல்லும்படி கேட்டு மனதில் பதிய வைப்பது பரபர… அந்த நாட்டில் பிரியாவை கண்டுபிடிக்கும் சீன்கள் சீட் நுனிக்கு இழுக்கும் விறுவிறுப்பு. வில்லனின் கோட்டைக்குள் புகுந்து பந்தாடுவது ஹாலிவுட்டுக்கு நிகரான ஆக்ஷன்.

வசனங்களில் அரசியல் நெடி… எனக்கு பாராட்டுகள் பிடிக்காது. இந்த நாட்டில் விளம்பரங்களுக்கும் பஞ்சமில்லை வயிற்று பசிக்கும் பஞ்சம் இல்லை. நான் வரக்கூடாதுன்னு பல பேர் நினைக்கிறாங்க என்னை காலம் வரவழைக்கும். பசிக்கு பஞ்சமில்ல பாராட்டு விழாவுக்கும் பஞ்சம்மில்ல… “நான் மக்கள் பிரச்சினையை பேசுபவன் யாருக்கும் பயப்படமாட்டேன்”.

நாங்க கூட்டணியா இருக்கோம் நீ தனி ஆள் என வில்லன் சொல்லும்போது நான் மக்களையும் தெய்வத்தையும் நம்பி நிற்கிற தனி ஆள் எனபதில் சொல்வதும் அரசியல் பொறி….

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போலீஸ் உதவி இல்லாமலேயே தீவிரவாதிகள் கூட்டத்தை கொன்று அழிப்பது நம்பகத்தன்மை இல்லாதது. பிரியாவாக வரும் மாதுரி இடாகி, வில்லத்தனத்தில் மிரட்டும் சண்முகராஜன், நக்கல் வசனம் பேசும் போலீஸ் அதிகாரி மன்சூர் அலிகான், தீவிரவாதிகளுக்கு உதவும் ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரி அருண்பாண்டியன் சர்வதேச கடத்தல் காரன் பாம்பே கே.சி. சங்கர் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன.

சாம்ஸ், பீலி சிவம், கலைராணி, சந்தான பாரதி போன்றோரும் உள்ளன.

சுந்தர் சி பாபு இசையில் விஜயகாந்த் பாடும் முரசு பாடல் கட்சியினரை முறுக்கேற்றும் ரகம். கே.பூபதி ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

Source: www.isaithai.com

No comments:

Post a Comment